Wednesday, 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ... !! (பகுதி - 4)

அனைவருக்கும் அன்பான வணக்கம் ,.....

நேற்று நாம் ஆத்மாவை எப்படி உணர்வது என்று பார்க்க இருந்தோம் ,... இப்போது தொடருவோம் ,....

ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து…   விமானம் ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.

அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது.

ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர்.

நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது.

இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..

சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
    
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே உண்மையான ஆன்மீகம்...,.

சரி இந்த உண்மையான ஆன்மீகம் . என்றால் எப்படி ...? மீண்டும் தொடருவோம் ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் ...,. உங்கள் கர்மவினைகளால் என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் ......
  அறிந்துகொள்ள ,.... 🌺 (ப- 4 )

மேலூர் எஸ்.எம் ராஜா
              📱 9442822011

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள ...!! (பகுதி - 3)

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை
எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது.

உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.

எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.

அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது.

தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது.

இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.
இப்பொழுது தனக்குள் இருக்கும் ஆன்மாவை உணர்தலே உண்மையான ஆன்மீகம்.

சரி இந்த ஆத்மாவை எப்படி உணர்வது ?
மீண்டும் தொடருவோம் ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது. ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்,,,..  உங்கள் கர்மவினைகளால். என்னையும் சேர்த்தே.....✒

🌺அன்போடு தொடருவோம் .,..
    அறிந்துகொள்ள ....🌺 ப-3

மேலூர் ராஜா
9442822011

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள ..... !! (பகுதி -2)

அனைவருக்கும் வணக்கம் ....!!

ஆன்மீகத்தை பற்றி நான் அவ்வளவாக அறியவில்லை, முழுமையாக அறிந்துகொள்ள நம் கண்களுக்கு தெரியும் பொருட்கள் போல அல்ல ஆன்மீகம் . நம் உணர மட்டுமே முடியும் . சிலர் கேட்கலாம் ஏன் ஆன்மீகம் இல்லாமல் நம் வாழமுடியாதா என்று ? வாழலாம் ஆனாலும் அவர்கள் கண்டிப்பாக ஆன்மீக உணர்வுகளோடு வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள் ..,..

மனிதன் சுவாசிக்க காற்று தேவையான ஒன்று , அது இல்லாமல் நாம் ஒரு நிமிடமாவது வாழ முடியுமா ,? முடியும் என்பவர்களே ஆன்மீகம் இல்லை என்று வாழ்பவர்கள். ஆம் காற்று இல்லாமல் வாழ அந்த ஒரு நிமிடத்தை மூச்சை அடக்கி , காற்றின் அவசியத்தை  உணர்ந்துக் கொண்டிருப்பவர்கள் போலத்தான் இவர்களும். வெளியில் இருந்து பார்க்கும் நாம் அவர்கள் மூச்சை அடக்கி இருப்பவர்கள் போலத்தான் தெரியும் . ஆனால் உண்மை அதுவல்ல அவர்களுக்காக அவர்களின் ஆத்மா இருக்கும் பூத உடலுக்காக உள்ளே சுவாசம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும் .

சரி இந்த ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்கின்றோமே... அந்த ஆன்மீகம் என்றால் என்னா என்று பார்ப்போம் ....

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்...
உங்கள் கர்மவினைகளால்,
என்னையும் சேர்த்தே,....✒

🌺அன்போடு தொடருவோம்....
           அறிந்துகொள்ள .....🌺

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள .... !!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அறிந்து உணர்ந்த ஆன்மீகம் மற்றும் சித்தர் குருமார்களைப் பற்றி வலைத்தளங்களில் எழுதப் போகின்றேன் என்று நினைக்கும் போதே,... இந்த வாய்ப்பினை அருளிய என் குருவின் பாதங்களை வணங்கிக் கொள்கிறேன் .

எனது எழுத்தாணியை எழுதத் தொடங்கி வைத்தவர். எங்களின் பூர்விகமான திருச் சூழியியல் எனும் திருச்சூழியில் அவதரித்து திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளால் பாதாள லிங்கத்தில் இருந்து பாலகனாக வெளிக்கொண்டு வரப்பட்ட 🌺 பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களைப் பற்றி தான்.

🌺 " எங்கு குருவின் ஆசி பூர்ணமாக கிடைக்கின்றதோ, அங்கே விதி விளையாடாது " 🌺

இது வெறும் வார்த்தைகள் அல்ல நான் தினம், தினம் பலமுறை பார்த்து உச்சரித்த வாழ்க்கையின் வார்த்தைகள் .... ஆம் எனது நாட்டத்திற்கு வழி சொல்லி கொடுத்த ஸ்ரீபோகர் சித்த  அறக்கட்டளையின் எனது விழியின் பார்வையை வெளிச்சமாக்கிய வாக்கியங்கள் .,..

உள்ளீர உள்ள கோயிலை அறிந்து வணங்கிட முடியாமல். புறம் உள்ள கோயில்களை நாடி எண்ணிய நேரமெல்லாம் சென்றுவந்தேன். மகத்துவம் அறியாத அன்பர்கள் சிலர் வெறும் வழிபாட்டு இடமாகவே சென்று வந்ததால் . உள்ளத்தில் இவர்களும் அறியவேண்டும் என்று எண்ணிய வேளையில் என் எண்ணங்களை விட வேகமாக அறிந்துக்கொண்ட அண்ணன் திரு. ஜீ ( அவர்கள் எப்பொழுதும் மறைவு வாழ்க்கை மட்டுமே அதனால் முழுமையாக அவர்களைப் பற்றி நான் கூறமுடியாத சூழ்நிலையில் ) உலக நிகழ்வை சித்தர் பாட்டின் வாயிலாக உணர்த்தினார். ( அண்ணன் அவர்கள் தான் இன்றும் எனது தேடல்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து விடையளித்தும் கொண்டிருக்கின்றார். பல சித்தர் பாடல்களை நான் அறியும் வண்ணம் பொருள் உணர்த்திக் கொண்டிருக்கின்றார் ) அதைப்பற்றியத் தகவல்களுக்கு என்னுடைய முகநூல் பக்கமான 🌷அறிவோம் ஆன்மீகம்🌷 எனும் பக்கத்தில் காணலாம் .

அதேபோல் சில காலத்திற்கு 📄 வைகறை முரசு நாளிதழ் கொஞ்சம் ஆன்மீகம் எனும் பகுதியில் எழுத வாய்ப்பு அமைத்துக் கொடுத்தார் அண்ணன் ஜெயகுமார் .

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்... உங்கள் கர்மவினைகளால், என்னையும் சேர்த்தே....✒

அன்போடு தொடருவோம்....
             அறிந்துகொள்ள ......

குருவின் ஆசியோடு....🌺🌺🌺 ( பகுதி 1)  தொடருவோம் ....

Saturday, 31 October 2015

கண்ணாமூச்சு காட்டிவந்த பருவமழை

கண்ணாமூச்சு காட்டி வந்த வடகிழக்கு பருவ மழை துவங்கிவிட்டது.
நேற்று அதிகாலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
கோடை மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும்.
தற்போது உருவாகும் மேகங்கள் பருவ மழை காலத்தில் உருவாகும் மேகங்களாகும்.
தற்போதைய வானிலை கணிப்பின்படி வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. எனவே தொடர் மழையை எதிர்பார்க்கலாம்.
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மற்றும் சராசரிக்கு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பருவ மழை எவ்வாறு இருக்கும் என்பதை, வருண பகவான் தான் முடிவு செய்ய வேண்டும் ,...
விவசாய பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கூடிய மேககூட்டம் சிறு தூரலுடன் கண்ணாமூச்சு காட்டி ஏமாற்றி சென்றுவிட்டது . இன்றையபொழுதோ சொல்லிக்கொள்ளும் அளவில் மழை பெய்துள்ளது. ம் காத்திருப்போம் இந்த வருடமாவது குடிநீர் தேவைக்கும் , விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் மழை மூலமாக கிடைக்குமா என்று ...!?

மேலூர் செய்திகளுக்காக
SM Raja
மக்கள்குரல் நிருபர்
9442822011 - 9500848973

Thursday, 21 May 2015

அன்னை பராசக்தி சில கோயில்களில் வித்தியாசமான திருக்கோலத்தில் அருள் புரிகின்றாள் அவற்றுள் சில ....

அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அதில் சில....

அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.

வடக்கு நோக்கி சிவனை பூஜை
செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம். தக்கோலம், அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.

கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.

துர்க்கையம்மனுக்கென்று தனிக்
கோயில். மயிலாடுதுறையை
அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.

அம்பாள் வில் வடிவில் சிவனை
வழிபடும் உற்சவமூர்த்தம். திருமால் பேறில் உள்ளது.

பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-
திருவெண்காடு,

சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர்
எதிராக அமைந்துள்ள தலங்கள். திருவானைக்கா, திருஆமாத்தூர்,
அறையணி நல்லூர் .

திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.

கொல்லூரில் மூகாம்பிகையே,
அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.

அமர்ந்த நிலையில் எட்டுத்
திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.

குழந்தையுடன் அம்பிகை காட்சி தரும் தலங்கள்:
இசக்கியம்மன்-நெல்லை மாவட்டம், சிதம்பரபுரம் கிராமம்.
பிள்ளை இடுக்கி அம்மன் நாகைமாவட்டம், திருவெண்காடு.

திருவண்ணாமலை மாவட்டம்
தேவிகாபுரத்தில் அம்மன்
பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.

பொள்ளாச்சி மாசாணியம்மன்
கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள்.

அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில்
அருள்பாலிக்கிறாள்.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில்.
அம்மன் பெரியநாயகி சம்பந்தரை
இடுப்பில் தூக்கிய நிலையில்
பிரகாரத்தில் உள்ளாள்.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி
கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.

தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம்
சிவக்கொழுந்தீசர் கோயிலில். அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.

பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.

நாகப்பட்டினம் மாவட்டம்
திருமணஞ்சேரியில் உள்ள
கோகிலாம்பாள் . இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி. வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் . நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.

கும்பகோணம் அய்யாவாடி
பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் . சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

Monday, 18 May 2015

குலசேகர பட்டிணம் முத்தாரம்மன்

குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருவுருவ சிலை உருவான அற்புத நிகழ்வு ....

குலசேகரப்பட்டினத்தில் சுயம்பு
வடிவிலேயே முத்தாரம்மனை பக்தர்கள் ஆரம்ப காலங்களில் வழிபட்டு வந்தனர்.
அப்போது அன்னையின்
திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, அவளைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று அவ்வூர் பக்தர்களுக்கு ஆவல் ஏற்பட்டது.

அம்பாளிடம் இதற்காக
மனமுருகி அவர்கள் வேண்டினர்.
அப்போது ஒருநாள், கோவில் அர்ச்சகரின் கனவில் அம்மன் தோன்றினாள்.
“எனது திருவுருவைக் காண நீங்கள் அனைவரும் ஆவலாக இருப்பது தெரிகிறது. கன்னியாக்குமரி அருகே
மைலாடி என்றொரு சிற்றூர் உள்ளது. அங்கு செல் அனைத்தும்
நிறைவேறும் என்று கூறினாள்.

மைலாடி பகுதியில் அதிக அளவில் பாறைகள் உண்டு. இதனை வெட்டி எடுத்து கலைநுணுக்கத்துடன் கடவுள்
சிலைகளை நிறைய பேர் செய்து
வருகின்றனர்.

இப்படி பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப, கற்களில் அற்புதமாக சிலை வடிவமைத்துக் கொடுக்கும் ஆற்றலை சுப்பையா ஆசாரி என்பவர் பெற்றிருந்தார். அவரது கனவிலும் குலசை முத்தாரம்மன் தோன்றினாள்.
குலசேகரன் பட்டினத்தில் தான்
சுயம்புவாக விளங்கி இருப்பது பற்றி விரிவாகக் கூறினாள்.
அதுமட்டுமல்லாமல், தன்  உருவத்தைக் காண அங்குள்ள பக்தர்கள் அனைவரும் ஆவலாக இருப்பதையும் ஆசாரிக்குத்
தெரியப்படுத்தினாள்.

பின்னர், தனது மற்றும் சுவாமியின் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்த அன்னை, தங்களை நன்கு உற்று
நோக்குமாறும், தென் திசையில் உள்ள ஆண் பெண் பாறையில் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் தங்கள் திருவுருவச் சிலையை வடித்துக் கொடுக்குமாறும் உத்தரவிட்டாள். தங்கள் சிலைகளைச் செய்து, தாங்கள்
சுயம்புவாக முளைத்துள்ள
இடத்திற்கு அருகாமையில் அந்தக்
கற்சிலையை நிறுவ வேண்டும்
என்றும் அந்தக் கனவில் ஆசாரிக்குக் கட்டளையிட்டு முத்தாரம்மன் மறைந்தாள்.

இந்தக் கனவு கலைந்ததும்
திடுக்கிட்டார் ஆசாரி. கனவில்
முத்தாரம்மன் தனக்கு ஆணை
பிறப்பித்ததை உணர்ந்தார். குலசேகரப்பட்டினம் எங்கிருக்கிறது என்பது பற்றி பலரிடமும் விசாரித்து
அறிந்து கொண்டார். அதன்பிறகு தன் மனதில் திடமாகப் பதிந்திருந்த அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை
அப்படியே கற்களில் சிலையாக
வடித்தார்.

முத்தாரம்மன் கனவில் கூறியபடி குலசை அர்ச்சகர்,அவ்வூரைச் சேர்ந்தச் சிலருடன் மைலாடி சென்றார்.
சுப்பையா ஆசாரி பற்றி விசாரித்து
அறிந்து அவரைச் சந்தித்தார்கள்.
சுப்பையா ஆசாரி ஏற்கனவே
ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சிலையை செய்து வைத்திருந்தார்.
அந்தப் புனிதமான சிலையை உணர்ச்சிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டு அவர்கள் குலசேகரன்பட்டினம் திரும்பினர்.
முத்தாரம்மனின் விருப்பப்படியே அந்தச் சிலை, சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த அன்னைதான் குலசேகரன்
பட்டினத்தில் இன்றும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள். முத்தாரம்மன்
அருகே ஒரே பீடத்தில் சுவாமி
ஞானமூர்த்தி வீற்றிருப்பது இந்த
ஆலயத்தின் முக்கியச் சிறப்பாகும்.

இதுபோல் அம்பாளும், சிவனும்
ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

இத்தலத்தில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், சுவாமி, அம்பாள் ஆகிய இருவருமே
வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் வேறு எந்த தலத்திலும் இத்தகைய காட்சியை காண இயலாது. மேலும் அம்பாளுக்கும், சிவனுக்கும்
ஒரே நேரத்தில் பூஜை
நடைபெறுகிறது என்பதும் முக்கிய விஷயமாகும். இந்த கோவிலின் தலமரமாக வேம்பு விளங்குகிறது *