Wednesday, 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! (பகுதி - 6 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் ....

இன்று இறைவனை நெருக்கமாக தரிசிப்போமா ,..?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் இறைவனை வழிபடுவதும் பயனற்றவை.

உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.

புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள்.

தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான்.

நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும்.

திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன்தான் உண்மையில் இறைவனை  வழிபடுகிறான்.

விக்கிரகத்தில் மட்டும் இறைவனை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் - அவனிடம் இறைவனைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் இறைவன் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார்.

கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் இறைவன்  அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

இறைவன் நம்மிடம் எதை விரும்புகின்றார் ...!? 

தொடருவோம் ,.,

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் ஏன்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் . என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் .....
      அறிந்துகொள்ள ..... 🌺 (ப-6)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ... !! (பகுதி -5)

அனைவருக்கும் அன்பான வணக்கம் ....

இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் .

இறைவனை நெருக்கமாக தரிசிப்போமா ,,,,? 

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள்  எண்ணங்களும் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் என்னையும் சேர்த்தே .....✒

🌺அன்போடு  தொடருவோம் .... இனைந்துக்கொள்ள ... 🌺 ப - 5

மேலூர் எஸ்.எம் ராஜா 9442822011

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ... !! (பகுதி - 4)

அனைவருக்கும் அன்பான வணக்கம் ,.....

நேற்று நாம் ஆத்மாவை எப்படி உணர்வது என்று பார்க்க இருந்தோம் ,... இப்போது தொடருவோம் ,....

ஒரு இடத்தை சென்றடைய பல்வேறுவழிகள் இருக்கும் உதாரணமாக சைக்கிள், இருசக்கரவாகனம், பேருந்து…   விமானம் ஏன் நடைப்பயணமாக கூட இருக்கலாம். இவை போலதான் ஆன்மாவை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர்.

அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும்,     தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது.

ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி, பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாககொண்டனர்.

நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது.

இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்துகொண்டிருக்கின்றனர்..

சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
    
   நிலையற்ற பொருட்களில் தன்னை தொலைக்காமல் ஆன்மாவை உணர்வதே உண்மையான ஆன்மீகம்...,.

சரி இந்த உண்மையான ஆன்மீகம் . என்றால் எப்படி ...? மீண்டும் தொடருவோம் ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் ...,. உங்கள் கர்மவினைகளால் என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் ......
  அறிந்துகொள்ள ,.... 🌺 (ப- 4 )

மேலூர் எஸ்.எம் ராஜா
              📱 9442822011

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள ...!! (பகுதி - 3)

ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை
எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது.

உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்!  (வீடு, வாகனம்..இன்னும்பிற)  இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.

எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத   நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.

அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது.

தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது.மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது. அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது.

இப்போது உணர்கிறான் தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல்  கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும், கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.
இப்பொழுது தனக்குள் இருக்கும் ஆன்மாவை உணர்தலே உண்மையான ஆன்மீகம்.

சரி இந்த ஆத்மாவை எப்படி உணர்வது ?
மீண்டும் தொடருவோம் ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது. ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்,,,..  உங்கள் கர்மவினைகளால். என்னையும் சேர்த்தே.....✒

🌺அன்போடு தொடருவோம் .,..
    அறிந்துகொள்ள ....🌺 ப-3

மேலூர் ராஜா
9442822011

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள ..... !! (பகுதி -2)

அனைவருக்கும் வணக்கம் ....!!

ஆன்மீகத்தை பற்றி நான் அவ்வளவாக அறியவில்லை, முழுமையாக அறிந்துகொள்ள நம் கண்களுக்கு தெரியும் பொருட்கள் போல அல்ல ஆன்மீகம் . நம் உணர மட்டுமே முடியும் . சிலர் கேட்கலாம் ஏன் ஆன்மீகம் இல்லாமல் நம் வாழமுடியாதா என்று ? வாழலாம் ஆனாலும் அவர்கள் கண்டிப்பாக ஆன்மீக உணர்வுகளோடு வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள் ..,..

மனிதன் சுவாசிக்க காற்று தேவையான ஒன்று , அது இல்லாமல் நாம் ஒரு நிமிடமாவது வாழ முடியுமா ,? முடியும் என்பவர்களே ஆன்மீகம் இல்லை என்று வாழ்பவர்கள். ஆம் காற்று இல்லாமல் வாழ அந்த ஒரு நிமிடத்தை மூச்சை அடக்கி , காற்றின் அவசியத்தை  உணர்ந்துக் கொண்டிருப்பவர்கள் போலத்தான் இவர்களும். வெளியில் இருந்து பார்க்கும் நாம் அவர்கள் மூச்சை அடக்கி இருப்பவர்கள் போலத்தான் தெரியும் . ஆனால் உண்மை அதுவல்ல அவர்களுக்காக அவர்களின் ஆத்மா இருக்கும் பூத உடலுக்காக உள்ளே சுவாசம் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும் .

சரி இந்த ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்கின்றோமே... அந்த ஆன்மீகம் என்றால் என்னா என்று பார்ப்போம் ....

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்...
உங்கள் கர்மவினைகளால்,
என்னையும் சேர்த்தே,....✒

🌺அன்போடு தொடருவோம்....
           அறிந்துகொள்ள .....🌺

அன்புடன் தொடருவோம் , அறிந்துகொள்ள .... !!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் அறிந்து உணர்ந்த ஆன்மீகம் மற்றும் சித்தர் குருமார்களைப் பற்றி வலைத்தளங்களில் எழுதப் போகின்றேன் என்று நினைக்கும் போதே,... இந்த வாய்ப்பினை அருளிய என் குருவின் பாதங்களை வணங்கிக் கொள்கிறேன் .

எனது எழுத்தாணியை எழுதத் தொடங்கி வைத்தவர். எங்களின் பூர்விகமான திருச் சூழியியல் எனும் திருச்சூழியில் அவதரித்து திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளால் பாதாள லிங்கத்தில் இருந்து பாலகனாக வெளிக்கொண்டு வரப்பட்ட 🌺 பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களைப் பற்றி தான்.

🌺 " எங்கு குருவின் ஆசி பூர்ணமாக கிடைக்கின்றதோ, அங்கே விதி விளையாடாது " 🌺

இது வெறும் வார்த்தைகள் அல்ல நான் தினம், தினம் பலமுறை பார்த்து உச்சரித்த வாழ்க்கையின் வார்த்தைகள் .... ஆம் எனது நாட்டத்திற்கு வழி சொல்லி கொடுத்த ஸ்ரீபோகர் சித்த  அறக்கட்டளையின் எனது விழியின் பார்வையை வெளிச்சமாக்கிய வாக்கியங்கள் .,..

உள்ளீர உள்ள கோயிலை அறிந்து வணங்கிட முடியாமல். புறம் உள்ள கோயில்களை நாடி எண்ணிய நேரமெல்லாம் சென்றுவந்தேன். மகத்துவம் அறியாத அன்பர்கள் சிலர் வெறும் வழிபாட்டு இடமாகவே சென்று வந்ததால் . உள்ளத்தில் இவர்களும் அறியவேண்டும் என்று எண்ணிய வேளையில் என் எண்ணங்களை விட வேகமாக அறிந்துக்கொண்ட அண்ணன் திரு. ஜீ ( அவர்கள் எப்பொழுதும் மறைவு வாழ்க்கை மட்டுமே அதனால் முழுமையாக அவர்களைப் பற்றி நான் கூறமுடியாத சூழ்நிலையில் ) உலக நிகழ்வை சித்தர் பாட்டின் வாயிலாக உணர்த்தினார். ( அண்ணன் அவர்கள் தான் இன்றும் எனது தேடல்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து விடையளித்தும் கொண்டிருக்கின்றார். பல சித்தர் பாடல்களை நான் அறியும் வண்ணம் பொருள் உணர்த்திக் கொண்டிருக்கின்றார் ) அதைப்பற்றியத் தகவல்களுக்கு என்னுடைய முகநூல் பக்கமான 🌷அறிவோம் ஆன்மீகம்🌷 எனும் பக்கத்தில் காணலாம் .

அதேபோல் சில காலத்திற்கு 📄 வைகறை முரசு நாளிதழ் கொஞ்சம் ஆன்மீகம் எனும் பகுதியில் எழுத வாய்ப்பு அமைத்துக் கொடுத்தார் அண்ணன் ஜெயகுமார் .

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம்... உங்கள் கர்மவினைகளால், என்னையும் சேர்த்தே....✒

அன்போடு தொடருவோம்....
             அறிந்துகொள்ள ......

குருவின் ஆசியோடு....🌺🌺🌺 ( பகுதி 1)  தொடருவோம் ....

Saturday, 31 October 2015

கண்ணாமூச்சு காட்டிவந்த பருவமழை

கண்ணாமூச்சு காட்டி வந்த வடகிழக்கு பருவ மழை துவங்கிவிட்டது.
நேற்று அதிகாலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
கோடை மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும்.
தற்போது உருவாகும் மேகங்கள் பருவ மழை காலத்தில் உருவாகும் மேகங்களாகும்.
தற்போதைய வானிலை கணிப்பின்படி வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. எனவே தொடர் மழையை எதிர்பார்க்கலாம்.
வட கிழக்கு பருவ மழை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சராசரி மற்றும் சராசரிக்கு கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த வருடம் பருவ மழை எவ்வாறு இருக்கும் என்பதை, வருண பகவான் தான் முடிவு செய்ய வேண்டும் ,...
விவசாய பகுதியான மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கூடிய மேககூட்டம் சிறு தூரலுடன் கண்ணாமூச்சு காட்டி ஏமாற்றி சென்றுவிட்டது . இன்றையபொழுதோ சொல்லிக்கொள்ளும் அளவில் மழை பெய்துள்ளது. ம் காத்திருப்போம் இந்த வருடமாவது குடிநீர் தேவைக்கும் , விவசாயத்திற்கும் போதுமான தண்ணீர் மழை மூலமாக கிடைக்குமா என்று ...!?

மேலூர் செய்திகளுக்காக
SM Raja
மக்கள்குரல் நிருபர்
9442822011 - 9500848973