Tuesday 14 April 2015

அண்ணாமலை யாரைப் பற்றிய நூலிலும் சித்திரையே முதல் மாதம் ,.

"" அண்ணாமலை சதகத்தின் உண்மை,  சித்திரையே முதல் தொடக்கம் ""

19ம் நூற்றாண்டில் மாம்பாக்கம் உபாத்தியாயர் எனும் திருச்சிற்றம்பல நாவலரால் இயற்றப்பட்ட நூல் * அண்ணாமலை சதகம் * என்பது . இது அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யும் நாள் , திருவண்ணாமலையில் உள்ள தீர்த்தத் தொகைகள் , திருக்கோயிலின் தலப்பெருமை,திருமுனைப் பாடி . நாட்டுச் செய்தி முதலியானவற்றை பற்றித் தெரிவிக்கின்றது . மேலும் இந்நூலில் விபூதி தரிக்கும் முறை , பிரதோஷ தரிசனம் , ருத்ராசம் அணியும் விதி , சிவபூசைக்கு உரிய பூக்கள் , சைவ மடங்களின் வகை. முதலியான செய்திகளும் உள்ளது . இந்நூலில் அண்ணாமலையாருக்குப் பௌர்ணமி தோறும் செய்யும் அபிஷேக வகை பற்றிய பாடலொன்று உள்ளது .

அந்தப் பாடல் இதோ ...

வருடாதி சித்திரைத் திங்கள்பூ ரணைநாண்
   மருக்கொழுந் தபிடேகமாம்,
வைகாசி சந்தனம தானியில் பலாப்பழமு
    மாங்கனி கதலிக்கனி,
கருதுஆடி சர்க்கரை நாலாவணியி லதிரசங்
     காணும் புரட்டாசியிற்,
காய்ச்சிய திரட்டுப்பா லைப்பசிக் கன்னமாங்
     கார்த்திகைத் தீபார்ச்சனை,
திருமார் கழிக்குநெய் தைத்தேன் குடங்கிர்தஞ்
     சேர்ந்தகம் பள மீன்மதித்,
தீந்தயிர் பரமனுக் காட்டல்விதி பூரணைத்
      திதிதோறு மாசபூசை,
யரிதா யறிந்துனக் கபிஷேக மதுபுரிந்
     தருள்பெறு வசந்தராயர்,
அண்ணாவி னிற்றுசெ யுண்ணாமுலைக்குரிய
     அண்ணா மலைத்தேவனே!

இப்பாடலில் நாவலரவர் , சித்திரைத் தொடங்கி மீன மதி ஈறாக வரிசையாக மாதங்களைக் குறிப்பிட்டுள்ளார் . சித்ரா பௌர்ணமி தொடங்கி ஒவ்வொரு பௌர்ணமியிலும் எந்தெந்தப் பொருட்களால் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளார் . சித்திரையில் மருக்கொழுந்தால் அபிஷேகித்தல் சிறப்பு என்கிறார் . இவருக்கு முன்னால் பதினாறம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் என்பவர் " புட்பவிதி " எனும் நூலில் சித்திரைத் திங்களை முதலாவதாகக் கொள்ளவேண்டும் ( பாடல் 21 மற்றும் 22 ) என்றே அத்தியாயம் இயற்றியுள்ளார் .

2 comments:

  1. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா , தங்களுக்கும் அந்த ஆதி சித்தனின் பூர்ணஆசி கிடைக்க வேண்டுகின்றேன்,...

      Delete