Wednesday 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள .... !! (பகுதி - 6 )

அனைவருக்கும் அன்பான வணக்கம் ....

இன்று இறைவனை நெருக்கமாக தரிசிப்போமா ,..?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் இறைவனை வழிபடுவதும் பயனற்றவை.

உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.

புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள்.

தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான்.

நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும்.

திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன்தான் உண்மையில் இறைவனை  வழிபடுகிறான்.

விக்கிரகத்தில் மட்டும் இறைவனை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் - அவனிடம் இறைவனைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் இறைவன் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார்.

கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் இறைவன்  அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

இறைவன் நம்மிடம் எதை விரும்புகின்றார் ...!? 

தொடருவோம் ,.,

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது . ஏன் ஏன்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் , உங்கள் கர்மவினைகளால் . என்னையும் சேர்த்தே ....✒

🌺அன்போடு தொடருவோம் .....
      அறிந்துகொள்ள ..... 🌺 (ப-6)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

No comments:

Post a Comment