Wednesday 16 December 2015

அன்போடு தொடருவோம் , அறிந்துகொள்ள ... !! (பகுதி 7)

அனைவருக்கும் அன்பான வணக்கம் 🙏

இன்று தாமதத்திற்கு வருந்துகின்றேன் ...

இன்றைய பகுதியில் இறைவன் நம்மிடம் எதை விரும்புகின்றார் என்று பார்ப்போம் ... !!

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.

ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் எஜமான் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி எஜமானிடம், ஓ,.., என் எஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான்.

மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய எஜமானின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான்.

இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை எஜமான் அதிகம் விரும்புவார்?

இறைவன் தான் அந்த எஜமான். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.

ஒரு வகையினர் சோம்பேறிகள் - ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; இறைவனின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றும் அனைத்திலும் அவனையே காண்பார்  மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் இறைவனின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் அன்பிற்கு உரியவர்கள்.

தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும்.

இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் இறைவன் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார்.

அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது.

அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும்.

நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி.

சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் - நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.

இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறான்.

அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி - அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி - அவனே மற்ற எல்லோரையும்விட இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறான்.

சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் - அவன் இறைவனிடம் இருந்து விலகியே இருக்கிறான்...

மேலும் தொடருவோம் ...

இங்கே நான் எழுதப் போகின்றவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது , ஏன் என்றால் உங்கள் எண்ணங்கள் மாறுபடலாம் . உங்கள் கர்மவினைகளால் , என்னையும் சேர்த்தே .... ✒

🌺அன்போடு தொடருவோம் ..... அறிந்துகொள்ள ....🌺(ப-7)

மேலூர் எஸ்.எம் ராஜா
9442822011

No comments:

Post a Comment